புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.262 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எம்பிக்களின் ஊதியம், பல்வேறு படிகள், இதர வசதிகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இத்தகவல்களைக் கோரியிருந்தார்.
கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2025-26ஆம் ஆண்டில் அத்தொகை ரூ.163 கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட இந்தத் தொகை ரூ.65 கோடி அதிகம் என்றும் எம்பிக்களின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள், அலுவலக-மருத்துவச் செலவுகள் ஆகியவை இதில் அடங்கும் என்றும் மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 21 பிரிவுகளின்கீழ் செலவினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றுள் ஊதியம், படிகள், பயண, மருத்துவச் செலவுகள் முக்கியமானவை என்றும் மாநிலங்களவைச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

