பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேருக்கு ரூ.168 கோடி விதித்து இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (டிஆர்ஐ) உத்தரவிட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியான டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான ரன்யா இவர், துபாயில் இருந்து பெங்களூருக்கு ஏறக்குறைய 15 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
டிஆர்ஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தன் தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரன்யா தங்கக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ரன்யாவின் முன்னாள் காதலரும் தெலுங்கு நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, தொழில் அதிபர்கள் ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்களும் கைதாகினர்.
மூவரிடமும் விசாரணை நீடித்த நிலையில், சட்ட விரோதமாக, வரி செலுத்தாமல் மோசடி செய்து தங்கக் கட்டிகளைக் கடத்திவந்த குற்றத்துக்காக கைதான நால்வருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நோட்டீசை, டிஆர்ஐ அதிகாரிகள் சிறைக்குக்குச் சென்று நால்வரிடமும் அளித்தனர்.
துபாயில் இருந்து இதுவரை 127 கிலோ தங்கம் கடத்திய ரன்யாவுக்கு ரூ.102 கோடியும் மற்ற மூவருக்கும் ரூ.168 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால், நான்கு பேரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.