ரூ.3 லட்சம் கோடி ஊழல் புகார்: மத்திய அமைச்சருக்குக் கர்நாடக அமைச்சர் கேள்வி

ரூ.3 லட்சம் கோடி ஊழல் புகார்: மத்திய அமைச்சருக்குக் கர்நாடக அமைச்சர் கேள்வி

டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.1,413 கோடியாக உயர்வு : எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு
கோப்புப் படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

30 Sep 2026 - 5:23 pm

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடத் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

2ஜி, நிலக்கரி ஊழல்களைவிட இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்த ஊழலில் மாநில முதல்வர் டி.கே. சிவகுமாருக்குத் தொடர்பிருப்பதாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

நந்தி உள்கட்டமைப்பு நிறுவன நிர்வாகி அசோக் கேனியைக் கைதுசெய்ய வேண்டும், சிவகுமார் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

1995ல் தொடங்கப்பட்ட அத்திட்டத்தில், 2004ல் சிவகுமார் அமைச்சராக இருந்தபோது முறைகேடுகள் நடந்ததாகவும் அவரது சொத்து மதிப்பு ரூ.4 கோடியிலிருந்து ரூ.1,413 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும் குமாரசாமி சாடினார்.

இந்நிலையில், குமாரசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் என்.செலுவராயசுவாமி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

“குமாரசாமி இருமுறை கர்நாடக முதல்வராகப் பதவி வகித்தவர். இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக அவர் நம்பியிருந்தால், ஆட்சியில் இருந்தபோது அதை அரசுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை? இது அவரது இரட்டை நிலையைக் காட்டுகிறது,” என்று அவர் சாடினார்.

மேலும், 1995ல் எச்.டி. தேவகவுடா முதல்வராக இருந்தபோதே இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்கின என்பதைச் சுட்டிய செலுவராயசுவாமி, இக்காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த அனைவரும் தங்கள் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில்கொண்டு, டி.கே.சிவகுமாரின் அரசியல் வளர்ச்சியைக் கண்டு அஞ்சியே குமாரசாமி இத்தகைய புகார்களைக் கூறிவருவதாகச் செலுவராயசுவாமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்