சென்னை: பொதுத்துறை வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தனியார் நிறுவனம் ஒன்று அந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. போலி ஆவணங்களை அளித்து அந்த நிறுவனம் ரூ.300 கோடி மோசடி செய்தது தெரியவந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் குல்னாஸ் பேகம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை தொடங்கி மாலை வரை சோதனை நீடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் லட்சுமணசாமி, அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத் துறையினரைக் காணமுடிந்தது.
குல்னாஸ் பேகம் பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும் வேறு சிலர் மீதும் பலகோடி ரூபாய்க்குச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
எத்தகைய போலி ஆவணங்களை வங்கியில் கொடுத்துக் கடன் பெற்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

