திருவனந்தபுரம்: இந்திய கேரள மாநில அரசுக் கருவூலங்களில் செயல்படாத நிலையிலுள்ள கணக்குகளில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் (S$486 மில்லியன்) கேட்பாரற்றுக் கிடப்பதாகச் சொல்லப்படுகிறது.
முதலீடு செய்துள்ளோரில் பலர் இறந்துவிட்ட நிலையில், அவர்களின் வாரிசுகள் கோராத பணமும் அதில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அத்தகைய முதலீடுகளை கருவூல ஊழியர்கள் சிலர் சுரண்டத் தொடங்கிய நிலையில், அப்பணத்தை வருவாய்த் துறைக்கு மாற்றிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த மூவாண்டுகள் அல்லது அதற்கு மேலான காலகட்டத்தில், எந்தப் பரிவர்த்தனையும் இல்லாத கிட்டத்தட்ட 300,000 கணக்குகளில் உள்ள பணம் அது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அக்கணக்குகளைச் செயலற்ற கணக்குகளாகக் கருதி, அவற்றில் உள்ள பணத்தை அரசாங்கக் கணக்குகளுக்கு மாற்றிவிடுமாறு சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக ‘மாத்ருபூமி’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில், கழகக்கூட்டம் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுபவர், ஏற்கெனவே இறந்துவிட்டவர் என இருவரின் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாக ரூ.15.6 லட்சம் பணத்தை எடுத்ததாகக் கூறி, ஆறு ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்; ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சில கருவூலங்களில், செயல்படாக் கணக்குகளிலிருந்து பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடப்படுவதை அரசாங்கம் கண்டறிந்தது. அத்தகைய கணக்குகளிலிருந்து பணம் எடுக்கும் ஊழியர்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பணப் பரிமாற்றம் இல்லாத, வாரிசுகள் இன்னும் உரிமை கோராத கணக்குகளை எவ்வளவு காலத்திற்குச் செயல்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, மூவாண்டுகாலத்திற்கு எந்தப் பணப் பரிமாற்றமும் இல்லாத கணக்குகளைச் செயல்படாக் கணக்குகளாக அறிவிக்க சட்டத்துறை பரிந்துரைத்துள்ளது. அதன்பிறகு அக்கணக்குகளிலுள்ள பணத்தை அரசாங்கத்தின் வருவாய்க் கணக்குகளுக்கு மாற்றிவிட முடியும்.

