இந்தியா - மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடி ஒப்பந்தம்

2 mins read
4f050bd7-768f-44e0-92e3-cbf1c59a468b
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (வலம்). - படம்: இந்து தமிழ் திசை ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், அதிபர் முய்சு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முய்சு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது.

ஆனால், அண்மைக்காலமாக மாலத்தீவு பல்வேறு நிதிச் சவால்களை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியாவுடனும் நட்பு பாராட்டுகிறார் அதிபர் முய்சு.

தமது இந்தியப் பயணத்தில் அதிபர் திரௌபதி முர்முவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

சந்திப்பு குறித்துக் கூறிய திரு மோடி, “இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே மாலத்தீவு பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மாலத்தீவு பெரும்பங்கு வகிக்கிறது,” என்றார்.

மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்சினை, மருத்துவ உதவி தேவையென்றால் எப்போதும் உதவும் முதல் நாடாக இந்தியா இருப்பதாகத் திரு மோடி சொன்னார்.

மாலத்தீவில் விமான நிலையத்தைத் தொடங்கி வைத்ததுடன் அங்கு 700 சமூக வீடுகளை இந்தியா கட்டித்தந்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“பல்லாண்டுப் பழமையான இருதரப்பு உறவுகள் வருங்காலத்திலும் தொடரும்,” என்றார் அவர்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (இடது), தம் துணைவியார் சஜிதா முகமதுடன் அக்டோபர் 8ஆம் தேதி தாஜ்மகாலுக்குச் சென்றார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (இடது), தம் துணைவியார் சஜிதா முகமதுடன் அக்டோபர் 8ஆம் தேதி தாஜ்மகாலுக்குச் சென்றார். - படம்: பிடிஐ

அக்டோபர் 8ஆம் தேதி அதிபர் முய்சுவும் அவரது மனைவி சஜிதா முகமதும் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மகாலுக்குச் சென்றனர். இவர்களது வருகையை முன்னிட்டு தாஜ்மகால் இரண்டு மணி நேரத்திற்குப் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்