லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் போக்குவரத்து அதிகாரி ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் 35 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்தையும் தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
லக்னோவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த வீட்டில் கைப்பற்றப்பட்டவற்றில் 1.62 கோடி ரூபாய் ரொக்கம், 13 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், பிற முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியன அடங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர் லலித் குமார் என்பதும் ஆக்ராவில் வட்டாரப் போக்குவரத்து உதவி அதிகாரியாக அவர் இதற்கு முன்னர் வேலைசெய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கு முன்னரும் லலித் குமாரின் வீட்டில் இதுபோன்ற சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆனால், அவற்றுக்கு உரிய கணக்குகளைக் காண்பித்ததால் அப்போது அவர் விடுவிக்கப்பட்டார்.
தற்போது கைப்பற்றப்பட்டிருக்கும் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சோதனையின்போது கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட 1.62 கோடி ரூபாயை செய்தியாளர்களிடம் அதிகாரிகள் காட்டினர்.

