பெங்களூரு: மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரூ.39,437 கோடி மதிப்பிலான குப்பை மேலாண்மை ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை மறுஆய்வு செய்ய இந்தியாவின் கர்நாடக மாநில அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அந்த ஒப்பந்தத்திற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் குறித்து நிதித்துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாள்களிலேயே அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பெங்களூரு நகரின் 5,200 டன் கழிவுகளைப் பதப்படுத்தி அகற்றுவதற்கான அந்தப் பெருந்திட்டத்திற்கு, நிதித்துறையின் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
அத்திட்டத்தில் தேவையற்ற செலவுகள், மிக அதிகமான வருடாந்தர விலையேற்றம், ஒப்பந்தத்தை 30 ஆண்டுகளுக்கு ஒரே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது போன்ற குறைபாடுகள் இருப்பதாக நிதித்துறை சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அத்திட்டத்தின் கொள்முதல் செயல்முறையையும் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளையும் விரிவாக ஆராய நால்வர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை எழுப்பிய எச்சரிக்கைகளை விரிவாக ஆராய்ந்து, ஏழு நாள்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மதிப்பீடு செய்த தொகையைவிட ஒப்பந்ததாரர் ரூ.6,390 கோடி கூடுதலாகக் கோரியதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஆண்டுக்கு 5% விலையேற்றம் என்ற விதிமுறையால், 30 ஆண்டுகளின் முடிவில் அடிப்படைக் கட்டணம் கிட்டத்தட்ட 430% உயரும் எனவும் நிதித்துறை எச்சரித்துள்ளது.
ஒரே நிறுவனத்திடம் 30 ஆண்டுகளுக்கு பெங்களூரு நகரின் மொத்த குப்பை மேலாண்மையையும் ஒப்படைப்பது அபாயமிக்கது என எச்சரித்த நிதித்துறை, எனவே ஒப்பந்தக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைக்கவும் ஆண்டு விலையேற்றத்தை 2.5% ஆகக் கட்டுப்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

