திருச்செந்தூர் கோவிலில் சிறப்புத் தரிசனத்திற்கு அமைச்சரிடம் ரூ. 4,000 வசூல்

திருச்செந்தூர் கோவிலில் சிறப்புத் தரிசனத்திற்கு அமைச்சரிடம் ரூ. 4,000 வசூல்

2 mins read
8f5002c6-8fce-4046-bb05-b9548db8d02e
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ரமேஷ். - படம்:

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடமே அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ், பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன் திருச்சி கோவிலில் ஆய்வு செய்த அவர், பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என்பதை கண்டறிந்தார்.

அதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் தேவை என்ற உத்தரவை பிறப்பித்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை (மே 29) அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

அவர் அமைச்சர் பொறுப்பு வகிப்பது தெரியாத வகையில் தனது உதவியாளருடன் சாதாரண நபர்களைப் போல சென்று இருக்கிறார். கோவில் வளாகத்திற்கு வந்து சுற்றிப்பார்த்துள்ளார்.

அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு என்று அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ், அவரது உதவியாளர் கேட்டு இருக்கின்றனர்.

இதற்கு அர்ச்சகர் ஒரு நபருக்கு 2 ஆயிரம் ரூபாய், இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டு இருக்கிறார்.

அந்த அர்ச்சகரிடம் அமைச்சர் உதவியாளர் பணம் இல்லை, ‘ஜிபே’யில் தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அர்ச்சகர் தனது ஜிபே நம்பரை சொல்லி ரூ.4 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.

பிறகு அமைச்சரின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்னதானக் கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு பணம் வாங்குவது குறித்து கடும் கோபத்துடன் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

“திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்,” என்று ‘எக்ஸ்’ பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் தந்தை சீனிவாசனும், 65, ஓர் அர்ச்சகர். மறைமலை நகர் ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலில் இன்னமும் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.5,000 அளவிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்