புதுடெல்லி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்திற்கு அருகே ரூ. 5,000 கோடி செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) திறந்துவைத்தார்.
ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு அனைத்துலக விமான நிலையம் வட ஆந்திராவை ஒரு முக்கியப் பொருளாதார, தொழில்துறை நடுவமாக உருமாற்றும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்தது.
அந்தத் திறப்பு விழாவில், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோரும் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக ஆண்டுக்கு ஆறு மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த விமான நிலையத்தை, வருங்காலத்தில் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகள் வரை பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தத் திட்டம் உள்ளது.
“போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு அனைத்துலக விமான நிலையத்தைத் திறந்துவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இது இணைப்பை வலுப்படுத்தி, ஆந்திரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்,” என்று திரு மோடி தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த விமான நிலையம், தடையற்றப் பயண அனுபவத்தை உறுதிசெய்யும் நோக்கில், மேம்பட்ட உள்கட்டமைப்பையும் அதிநவீனத் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
“இது சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும். மேலும், இந்த விமான நிலையத்தின் முனையக் கட்டடம் ஆந்திரத்தின் கலாசார அடையாளத்தையும் போற்றுகிறது,” என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

