புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் திருட்டில் கோயில் அர்ச்சகரே ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, தற்போது அங்குப் பரவலாகக் கொள்ளை நடைபெறுகிறது. ராமர் கோயிலில் இருந்து ரூ.5,000 கோடிக்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று அவர் கூறினார்.
கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படும் இந்தக் கோயிலைப் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். மற்றவர்களின் சொத்துகளை தங்களுடையது என்று உரிமை கோருவது, ராமரின் பெயரால் நடத்தப்படும் கொள்ளையாகவே உள்ளது என்று அவர் சாடியுள்ளார்.
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தை எண்ணிய தனியார் ஊழியர்களுக்கு விதிமுறைகள் எதுவும் இல்லை என்று உத்தரப் பிரதேச அரசின் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் பல தீவிரமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பல்வேறு தரப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களே பணத்தை எண்ணியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களுக்குச் சீருடை, சோதனைகள் எதுவும் இல்லை. சிசிடிவி கண்காணிப்பு நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படவில்லை
கோயில் வளாகத்திலிருந்து அறக்கட்டளை அறைக்குக் காணிக்கைப் பெட்டிகளைக் கொண்டுசெல்வது முதல் வங்கியில் பணத்தைச் செலுத்துவது வரை ஒவ்வொரு நிலையிலும் அலட்சியம் இருந்ததைக் குழுவின் விசாரணை வெளிப்படுத்தியது.
ஊழியர்கள் சிசிடிவி கேமராக்களுக்கு முன்னால் நின்றுகொண்டே திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் பேரில் குழு திங்கட்கிழமையன்று (ஜூன் 22) காணிக்கை திருட்டு வழக்கைப் பதிவு செய்தது.
இந்நிலையில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் காணிக்கைகள், நன்கொடைகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை, தலைமைத் தணிக்கையாளர் மூலம் தணிக்கை கோரிப் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

