புதுடெல்லி: புதுடெல்லியில் தெருநாய்களைக் கொன்றவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று விலங்குநல அமைப்பான பீட்டா அறிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு கிழக்கு டெல்லியில் உள்ள கபீர் நகரில் இரண்டு தெருநாய்களை மர்ம நபர்கள் கொன்றுவிட்டார்கள். இரு நாய்களும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதால் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தெருநாய்களைக் கொன்றவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விலங்குகளைக் கொல்வது, கொடுமைப்படுத்துவது ஒருவித உளவியல் பிரச்சினையாகும். இவர்கள் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். ஆகையால், அனைவரின் பாதுகாப்புக் கருதி இந்த வழக்குப் பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்கலாம்,” என்று பீட்டா கூறியுள்ளது.
“தெருநாய்களைக் கொன்றவர்கள் யார் என்ற விவரங்கள் அல்லது அடையாளங்கள் ஏதேனும் தெரிந்தால், அது பற்றி காவல்துறையிடம் தெரிவித்தால் ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும்,” என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

