நூறாயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் ரூ.70,000 கோடி வரிமோசடி

நூறாயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் ரூ.70,000 கோடி வரிமோசடி

2 mins read
23ee9bb7-0f10-4263-af40-9296d0c4d5e5
இந்த மோசடியில் கர்நாடகாவில் உள்ள உணவகங்கள் ஆக அதிகமாக ரூ.2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. - சித்திரிப்புப் படம்: நியூஸ்24

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் உணவகங்கள் ரூ.70,000 கோடி வரை வரிமோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளதாக நேரடி வரிவிதிப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இத்தகைய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க ஒரே விலைப்பட்டியல் கருவியைப் (பில்லிங் கருவி) பயன்படுத்தி, உணவக நிர்வாகங்கள் மோசடி செய்துள்ளன. இவற்றுள் பெரும்பாலான உணவகங்கள் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசடியின் மூலம் இந்த உணவகங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்துக்கு உரிய வரிகளைச் செலுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, கடந்த ஆண்டு ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பிரபல உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது விலைப்பட்டியல் கருவியில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளே வரி ஏய்ப்புக்குக் காரணம் என்பது தெரியவந்தது.

இரண்டாம் கட்டமாக, தமிழகம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஏறக்குறைய 1.77 லட்சம் உணவகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின்மூலம் மொத்தம் ரூ.2.43 லட்சம் கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த ஆவணங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்மூலம் கடந்த 2019-2020 நிதியாண்டு முதல் இப்போது வரை ரூ.70,000 கோடி மதிப்பிலான வருவாய் மறைக்கப்பட்டு, உணவக நிர்வாகங்கள் வரி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

மேலும், ‘ஜிஎஸ்டி’ எனப்படும் சரக்கு சேவை வரிகளைச் செலுத்துவதிலும் மோசடி நிகழ்ந்துள்ளது.

இந்த மோசடியில் கர்நாடகாவில் உள்ள உணவகங்கள் ஆக அதிகமாக ரூ.2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தெலுங்கானாவில் ரூ.1,500 கோடியும் தமிழகத்தில் ரூ.1,200 கோடியும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்