தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம் ஊழியர் இருவரைச் சுட்டுக்கொன்று ரூ.83 லட்சம் கொள்ளை (காணொளி)

1 mins read
ca90b7f7-7243-4b19-81e5-d8c5ffb9889f
சுட்டுக்கொல்லப்பட்ட கிரி வெங்கடேஷ் (இடது), சிவகுமார். - படங்கள்: டிவி9கன்னடா

பீதர்: தானியங்கி வங்கி இயந்திரத்தில் நிரப்ப பணத்தை எடுத்துவந்த ஊழியர்கள்மீது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி, ரூ.83 லட்சத்தைக் (S$131,100) கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம், பீதர் நகரில் வியாழக்கிழமை (ஜனவரி 16) முற்பகல் 11.30 மணியளவில் நிகழ்ந்தது.

துப்பாக்கிச்சூட்டில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாவலர் கொல்லப்பட்டார்; காயமுற்ற சிவகுமார் என்ற இன்னொரு பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிவாஜி சௌக் பகுதியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தைக் கொள்ளையர்கள் பெட்டியோடு எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் இருந்த சிலர் கொள்ளையர்களை நோக்கிக் கற்களை வீசி எறிந்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றும் அது முடியாமல் போனது.

இச்சம்பவம் கைப்பேசியில் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது.

கொள்ளையர்கள் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக ‘டிவி9கன்னடா’ ஊடகச் செய்தி தெரிவித்தது.

அந்த ஏடிஎம் வாகனத்தில் ரூ.87 லட்சம் இருந்ததாகவும் கொள்ளையர்கள் ரூ.83 லட்சத்துடன் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறை, அருகிலிருந்த சாலைகளில் தடுப்புகளை அமைத்து மூடியது.

மேலும், காவல்துறை தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்