நாக்பூர்: கடந்த புதன்கிழமை (ஜூலை 17) இந்தியாவின் மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள கச்சிரோலி பகுதியில் காவல்துறையின் அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தி 12 நக்சலைட்டுகளைச் சுட்டுக்கொன்றனர்.
வந்தோலி எனும் சிற்றூரில் நடந்த அந்தத் துப்பாக்கிச் சண்டை ஆறு மணி நேரம் நீடித்தது. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் ஐவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்சலைட்டுகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க, அப்பகுதியைச் சேர்ந்ததொரு சிற்றூரில் வசிக்கும் பழங்குடியினர் ஒருவர் தந்த தகவலே அதிரடிப் படையினருக்குப் பேருதவியாக இருந்தது.
சுட்டுக்கொல்லப்பட்ட 12 பேரும் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதால் அவர்களைப் பற்றி துப்பு தருவோருக்கு வெகுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, துப்பு கொடுத்த பழங்குடியின மனிதர்க்கே அந்த 86 லட்ச ரூபாய் (S$138,200) பணமும் வழங்கப்படுவதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, நக்சலைட்டுகளைச் சுட்டுக்கொன்ற அதிரடிப்படையினருக்கு ரூ.51 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 109 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காவல்துறை தலைமை ஆய்வாளர் சந்தீப் பாட்டில் தெரிவித்தார்.