புதுடெல்லி: மியன்மாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அஸ்ஸாம் காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
மியன்மார்-இந்திய எல்லையில் மணிப்பூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) இரவில் லகிபூர் காவல்துறைக்கு உட்பட்ட பான்ஸ்கந்தி பகுதியில் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் டிரக் ஒன்றை காவலர் மறித்து சோதனையிட்டனர்.
அப்போது, டிரக்கின் இரண்டு ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,000 போதை மாத்திரைகள், 2 கிலோ கிரிஸ்டலின் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தப் போதைப் பொருள்கள் மியன்மாரிலிருந்து கடத்தி வரப்பட்டு அஸ்ஸாம் வழியாக நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட இருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், அஸ்ஸாமைச் சேர்ந்த சூரஜ் சேத்ரி, 25, மோங்கல்ஜித் ராஜ்குமார், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா, “காசர் காவல்துறையினர் வெற்றிகரமாக போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். பான்ஸ்கந்தியில் ஒரு லாரியை தடுத்து நிறுத்தி, முழுமையான சோதனைக்குப் பிறகு ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மீட்டுள்ளனர்,” என்று தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

