கட்டிலுக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி!

கட்டிலுக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி!

1 mins read
17a10c29-03f2-47ae-b096-a97a6f6ac3af
22 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலுள்ள ஒரு வீட்டில் கட்டிலுக்கு அடியில் 22 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி (S$6.8 மில்லியன்) பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் பெண் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் வியாழக்கிழமை இரவு வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இது வெளிச்சத்திற்கு வந்தது.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அப்பணம் பதுக்கப்பட்டிருந்தது என்று அம்மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்டுமான நிறுவனங்கள், தங்க வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடமிருந்து தெலுங்கானா வரி என்ற பெயரில் ரூ.1,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ள தொகையின் ஒரு பகுதியே இது என்றும் அப்பணத்தைத் தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

வருமான வரித்துறை சோதனை இடம்பெற்ற அஸ்வத்தம்மாவின் வீட்டில் சிக்கிய பணம் 500 ரூபாய்க் கட்டுகளாக இருந்தன என்று என்டிடிவி செய்தி குறிப்பிட்டது.

அவருடைய கணவர் அம்பிகாபதி பெங்களூரு மாநகரக் கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் முந்திய ஆட்சிக் காலத்தில், பொதுப் பணித்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 விழுக்காட்டை பாரதிய ஜனதா கட்சியினர் தரகுத்தொகையாக எடுத்துக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
பணம்சோதனைவருமான வரி