திருமணத்தில் சாப்பாடு கிடைக்காததால் ஓடிப்போன மணமகன்

2 mins read
baea597b-c2e3-4010-a4d0-8488adc607f2
திருமணத்தில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்பட்டதைக் கேள்விப்பட்ட மாப்பிள்ளை அங்கிருந்து தப்பியோடி, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். - கோப்புப்படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சவுந்தலி மாவட்டத்தில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மாப்பிள்ளை கடுங்கோபமடைந்தார். எத்தனையோ பேர் வந்து சமாதானம் சொல்லியும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை. கோபத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிப்போய் விட்டார்.

மெஹ்தாப் என்னும் அந்த ஓடிப்போன மணமகன், அதே நாள் இரவில் இன்னோர் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்துவிட்டார். இவ்வளவுக்கும் ஏற்கெனவே முன்பு திருமணம் செய்யவிருந்த பெண்ணுக்காக ரூ.1,60,000 வரதட்சணை பெற்றுள்ளார். இதனால் மணமுடைந்த அந்தப் பெண் வீட்டார் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சவுந்தலி மாவட்டத்திலுள்ள ஹமித்பூர் என்னும் சிற்றூரில் டிசம்பர் 22ஆம் தேதி நடந்தது. மணமகன் மெஹ்தாப், மணமகள் இல்லத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

பின்னர் அவர்களை அன்புடன் வரவேற்றனர் மணமகள் குடும்பத்தினர். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமானோர் வந்திருந்ததால், மணமகள் வீட்டார் சார்பில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த உணவு போதவில்லை. மாப்பிள்ளை உள்ளிட்ட சிலருக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

ஓடிப்போன மாப்பிள்ளையைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்குச் சென்ற மணமகள் வீட்டாருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மணமகன், இன்னோர் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்து, மணமக்கள் சகிதம் இருந்தனர்.

இதையடுத்து, மணமகன் குடும்பத்தார் மீது காவல்துறையில் புகார் செய்தனர் மணமகள் குடும்பத்தினர். அத்துடன், இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. பின்னர், அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் இரு சாராரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, பெண் வீட்டார் வரதட்சணையாகக் கொடுத்த ரூ.1,60,000ஐ மெஹ்தாப்பிடம் இருந்து வாங்கிக் கொடுத்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

உத்தரப் பிரதேசத்தில், திருமண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை கோபித்துக் கொள்வது, ஓடிப்போவது போன்ற விநோதச் சம்பவங்கள் அடிக்கடி நிகழும். கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜில் நடந்த திருமணம் ஒன்றில், சரியான வரவேற்பு இல்லை என்று ஓடிப்போன மாப்பிள்ளையைக் காவலர்கள் வந்து சமாதானப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதேபோல் 2024 மே மாதம், உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூரில் நடந்த ஒரு திருமணத்தின்போது, மணமகன் மணமேடையில் இருந்த மணமகளுக்கு விருந்தினர்கள் முன்னிலையில் முத்தமிட்டதால், இரு வீட்டாரும் அடிதடியில் இறங்கினர். இதையடுத்து, இரு வீடுகளையும் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதே காலகட்டத்தில் இன்னொரு திருமணத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை, மணமகள் 20 கி.மீ. தூரம் வரை துரத்திப் பிடித்து வந்து மணமுடித்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

குறிப்புச் சொற்கள்