அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு ரூ.92.30 ஆக சரிந்தது

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு ரூ.92.30 ஆக சரிந்தது

2 mins read
df33cde0-87e5-49bd-bfee-817c889dbd61
ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: த எட்ஜ்

புதுடெல்லி: ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.30ஆகச் சரிந்தது.

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்களாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால் திங்கட்கிழமை (மார்ச் 9) காலை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சரிந்தது.

திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 92.30ஐத் தாண்டி, புதிய சாதனை அளவை எட்டியதாக இந்தியா டுடே தகவல் வெளியிட்டிருந்தது.

அமெரிக்க டாலர் வலுவடைவதும் இந்தியப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்வதும் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தன.

இந்தியப் பங்குச்சந்தைகளும் திங்கட்கிழமை வரலாறு காணாத அளவுக்குக் கடும் சரிவுடன் தொடங்கின.

மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டெண் (சென்செக்ஸ்) காலையில் 77,056.75 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,840.47 புள்ளிகள் குறைந்து 77,088.66 புள்ளிகளில் வணிகமானது.

அதேபோல, தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் (நிஃப்டி) 573.15 புள்ளிகள் குறைந்து 23,877.30 புள்ளிகளில் வணிகமானது.

ரூபாய் மதிப்பு சரிவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வு இந்திய நாணயத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 80%க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. அதாவது, அதிகரிக்கும் எண்ணெய் விலையால் நாட்டின் இறக்குமதி செலவும் டாலருக்கான தேவையும் அதிகரிக்கின்றன.

இரண்டாவதாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அண்மையில் இந்தியச் சந்தைகளிலிருந்து பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சொத்துகளை விற்கும்போது, ​​அவர்கள் ரூபாயை டாலராக மாற்றுகிறார்கள். இது உள்நாட்டு நாணயத்தை பலவீனப்படுத்துகிறது.

மூன்றாவதாக, மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் மோதலுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான சொத்துகளை நோக்கித் தள்ளியுள்ளது. இது, பல வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக டாலரை வலுப்படுத்துகிறது.

ரூபாய் மதிப்பு குறைவதால், குறிப்பாக கச்சா எண்ணெய் போன்ற பொருள்களின் இறக்குமதி இந்தியாவிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இது பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து, இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பெரிதும் நம்பியிருக்கும் துறைகளுக்குச் செலவுகளை அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்