மீண்டும் சரிகிறது ரூபாய் மதிப்பு; ஜூலையில் மட்டும் 2% வீழ்ச்சி

மீண்டும் சரிகிறது ரூபாய் மதிப்பு; ஜூலையில் மட்டும் 2% வீழ்ச்சி

2 mins read
8231c9fb-e8b1-426b-bfbc-e87bf176f17c
ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 97 ரூபாய் என்னும் வரலாற்றுச் சரிவைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. - கோப்புப் படம்: தி இந்து

புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் பாதாளத்தை நோக்கிச் சரியத் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 விழுக்காடு இறங்கிவிட்டது.

ஆசிய நாணயங்களும் வலுவிழந்தாலும் ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்தது.

மே மாதம் தான் இழந்த மதிப்பை ஜூன் மாதம் மீட்டெடுத்தது ரூபாய்.

எண்ணெய் விலை குறைந்ததும் அமெரிக்க டாலர் வைப்புத்தொகைகள் மற்றும் வெளிநாட்டுக் கடன் வரவுகளை ஈர்க்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளும் நாணய மதிப்பு மீட்சிக்குக் கைகொடுத்தன.

அந்த நடவடிக்கைகள் ஏறத்தாழ ஒரு மாத காலத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை ஈர்த்தன.

ஆயினும், ரூபாய் மதிப்பின் ஏறுமுகம் தற்போது தடைபட்டுள்ளது.

எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டதாலும் உலகளாவிய நிச்சயமற்ற போக்கு அதிகரித்ததாலும் திங்கட்கிழமை (ஜூலை 20) வணிகத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கு 96.44 ரூபாய் என்று சரிந்து இறுதியில் 96.36 என்று மீண்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மே 20ஆம் தேதி இருந்த 96.36 என்ற மதிப்பை அது மீண்டும் தொட்டது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மேலும் 6 காசுகள் சரிந்து 96.42 ரூபாயாக வணிகம் ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு விரைவில் 97 ரூபாயைத் தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவ்வாறு சரிந்தால் அதுவே வரலாற்றுச் சரிவாக இருக்கும்.

கடந்த 2013ஆம் ஆண்டு இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இருக்கும் அமெரிக்க டாலரை ஈர்க்க வங்கிகள் மூலம் சிறப்பு வைப்புத்தொகைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதேபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ரிசர்வ் வங்கி யோசிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், நாணய மதிப்பை நிர்வகிக்க எந்த அளவுக்குத் தனது தலையீடு தேவை என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சந்தையின் நிச்சயமற்ற போக்கிற்கு அந்தக் கருத்துவேறுபாடுகள் காரணமாக அமைந்துள்ளதாக வங்கி நடத்திய ஆலோசனைகள் குறித்து அறிந்த மூன்று வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்