புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) படுவீழ்ச்சி கண்டது.
காலையில் வர்த்தகம் தொடங்கியதும் ஓர் அமெரிக்க டாலருக்கு ரூ.95.95 என்று இருந்த அதன் நிலவரம் திடீரென்று ரூ.96.16 என்னும் அடிமட்டத்தைத் தொட்டது. கடந்த மே மாதத்திற்குப் பின்னர் இதுவே ஆக அதிகமான வீழ்ச்சி. மேலும், முந்தைய நாள் வர்த்தகத்தைக் காட்டிலும் காலையில் 46 காசுகள் குறைவாக ரூபாயின் மதிப்பு இருந்தது.
அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல், அதன் தொடர்பாக ஏற்றம் கண்டு வரும் எண்ணெய் விலை, அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றம் ஆகியன ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாணய வர்த்தகர்கள் கூறினர்.
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ரூபாயின் மதிப்பு ரூ. 95.72 என்று தொடங்கி, ரூ.95.65 என முடிவடைந்தது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 85 விழுக்காட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், புவிசார் அரசியல் நிகழ்வுகளையும் அவை எரிசக்தி விலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மீண்டும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
கச்சா எண்ணெய் விலையும் புவிசார் அரசியல் பதற்றங்களும் மீண்டும் அதிகரித்துள்ள வேளையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுத் தளங்களை நோக்கி நகர்ந்ததால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
அது இந்திய ரூபாயின் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு இந்தியரை ஈர்க்க தீவிர முயற்சி
இதற்கிடையே, இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தவும் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்டெடுக்கவும் வெளிநாடுகளில் வசிக்கும் 35 மில்லியன் இந்தியர்களிடமிருந்து வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைகளை ஈர்க்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு அரசு வங்கிகளை நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
திங்கட்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அது பற்றி பேசப்பட்டதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது.
சிறப்புத் தொடர்புத் திட்டங்கள் மற்றும் மின்னிலக்க வழிமுறைகள் மூலமாகவும் புதுமையான நிரந்தர நாணய வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும் வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான தொடர்பை வலுப்படுத்துமாறு அரசு வங்கிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வெளிநாடுகளிலிருந்து வரும் வைப்புத்தொகையை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்பாக மத்திய (ரிசர்வ்) வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் (CEOs) சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாக தகவல் ஒன்று தெரிவித்தது.

