70,000 இந்தியர்களுக்கு வேலை தர ரஷ்யா ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

70,000 இந்தியர்களுக்கு வேலை தர ரஷ்யா ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

படம்: இந்திய டுடே

04 Oct 2026 - 5:14 pm

2 mins read

புதுடெல்லி: இந்த ஆண்டில் ஏறத்தாழ 70,000 இந்திய ஊழியர்களுக்கு ரஷ்யா வேலை வழங்க முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சனிக்கிழமை (அக்டோபர் 3) விளக்கிய அவர், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கலாசாரம், மக்கள் தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான பங்களிப்பை விவரித்தார்.

அந்தப் பங்களிப்பு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்றார் திரு ஜெய்சங்கர்.

மேலும், உக்ரேன் மோதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு, அமைதித் தீர்வுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் அண்மைய அரசதந்திர முயற்சிகள் ஆகியன குறித்தும் அவர் ஆலோசனைக் குழுவிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்தியா-ரஷ்ய உறவுகள் குறித்து பேசிய ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டைச் சமநிலையான முறையில் விரிவுபடுத்தும் எண்ணத்தை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு கட்டுமானம் மற்றும் தளவாடத் துறைகளில் ஏறத்தாழ 70,000 இந்திய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகனத்துறை, மருந்தியல், உணவுப் பொருள்கள், கடல்சார் பொருள்கள், பொறியியல் பொருள்கள், ரசாயனங்கள், துணிமணிகள் ஆகிய ஏழு துறைகளில் ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதியை அதிகரிக்க இரு நாடுகளும் பரிசீலித்து வருவதாகக் குழுவினரிடம் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

எரிசக்தி உறவுகள் குறித்துப் பேசிய அவர், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் முக்கிய முன்னுரிமை என்றார்.

ரஷ்யாவுடனான இந்திய உறவின் பல்வேறு அம்சங்களை தமது சமூக வலைத்தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரேன்-ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மற்றும் அரசதந்திர முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தீவிர ஆதரவு குறித்தும் அதில் நான் குறிப்பிட்டுள்ளேன்,” என்றும் திரு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்