மாஸ்கோ: இந்தியாவின் உரப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் அதிபர் புட்டினுடன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ரஷ்யாவிலிருந்து உர விநியோகம் தொடர்ந்து தடையின்றி உயர்த்தப்படும் என்று புட்டின் உறுதியளித்தார்.
எரிசக்தி, விவசாயம், அணுசக்தி, உயர்தொழில்நுட்பப் பங்காளித்துவம் உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் இருநாட்டு உறவு சீரான முறையில் முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறிய சரிவுக்குப் பிறகு வணிகம் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது என்று பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் கூறினார்.
இந்தியா - ரஷ்யா இடையே பொருளியல், உத்திபூர்வ உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உயர்நிலைச் சந்திப்பு அமைந்துள்ளது.
பல்லாண்டுகால, வலுவான இந்தியா- ரஷ்யா உறவை ஜெய்சங்கரின் இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவின் முதன்மைத் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டோரோவுடன் இணைந்து வணிகம், பொருளியல், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாட்டு ஒத்துழைப்பிற்கான 27வது இந்தியா-ரஷ்யா அரசாங்க ஆணையக் கூட்டத்திற்கு ஜெய்சங்கர் இணைத் தலைமை தாங்கினார்.
கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறிய திரு புட்டின், வரும் செப்டம்பர் மாதம் ‘பிரிக்ஸ்' உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறார்.


