இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ள ரஷ்யா

இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய்க் கையிருப்பு உள்ளதென மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ள ரஷ்யா

2 mins read
24ab74f2-7b07-46d0-891d-119396a1e9a4
ரஷ்யாவின் நோவோரோசிஸ்கின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள நோவோரோசிஸ்க் எரிபொருள் எண்ணெய் முனையம். 2018 மே மாதம் எடுக்கப்பட்ட படம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஈரான்- அமெரிக்கா, இஸ்‌ரேல் போரினால் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் விற்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது.

கிட்டத்தட்ட 88 விழுக்காடு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வர்த்தக, தொழில் துறை அமைச்சின் அண்மைய தரவுகளின்படி, ஜனவரி 2026ல் ரஷ்யாவிலிருந்து 1.98 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு.

ஜனவரி 2026ல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 16.6% ஈராக்கிலிருந்தும் 17.5% சவூதி அரேபியாவிலிருந்தும் வந்தது.

தற்போது, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது.

எனினும், ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம் என அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

இந்தப் புவிசார் அரசியல் நெருக்கடி நிலையினால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு இந்தியாவுக்கு பெரும் சிக்கலாகும். அந்நியச் செலாவணி இருப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) நேரடியாகப் பாதிக்கும். அனைத்துப் பொருள்களின் விலைகளும் ஏறும்.

இந்நிலையில், இந்தியாவிடம் 6 முதல் 8 வாரங்களுக்குத் தேவையான அளவு கச்சா எண்ணெய்யும் எரிபொருளும் கையிருப்பு உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டுவரப்படாமல், வேறு வழிகளிலும் எரிசக்தி விநியோகிக்கப்படுகிறது. அந்த எரிசக்தியை இந்திய எரிசக்தி நிறுவனங்களால் பெற முடிகிறது. அந்தச் சரக்குகள் இந்தியாவுக்குத் தொடா்ந்து கிடைக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் விநியோகத்தில் நிகழும் தற்காலிகப் பாதிப்பைத் தணிக்க உதவும் என்றார் அவர்.

நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம், இருப்பு நிலவரத்தைத் தொடா்ந்து கண்காணிக்க எல்லா நாளும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை மத்திய பெட்ரோலிய அமைச்சு நிறுவியுள்ளது.

தேவைப்பட்டால் சூழலை மேலும் தணிக்க படிப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றாா் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்