இந்தியாவுக்கு ஆக அதிகமாக கச்சா எண்ணெய் அனுப்பும் நாடு ர‌ஷ்யா

2 mins read
b83c5d73-2fd8-43d1-bf21-2e83f63a44ef
35 விழுக்காட்டு கச்சா எண்ணெய்யை இந்தியா, ர‌ஷ்யாவிடமிருந்து தருவிக்கிறது. - படம்: என்டிடிவி / இணையம்

புதுடெல்லி: இந்தியாவுக்கு ஆக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாக ர‌ஷ்யா உருவெடுத்திருப்பதாக இந்தியாவின் பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 35 விழுக்காடு ர‌ஷ்யாவிடமிருந்து தருவிக்கப்படுவதாக திரு புரி கூறினார். எண்ணெய், இயற்கை எரிவாயு தொடர்பான விருது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பில் கடந்த ஈராண்டுகளில் இந்தியாவின் போக்கு பெரிய அளவில் மாறியிருப்பது பற்றி திரு புரி விவரித்தார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, ர‌ஷ்யாவிடமிருந்து 0.2 விழுக்காட்டு கச்சா எண்ணெய்யை மட்டும்தான் தருவித்தது. எனினும், அண்மைய மாதங்களில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ர‌ஷ்யா தொடர்ந்து முதல் சில இடங்களை வகித்து வருகிறது.

“கொஞ்ச காலமாகவே ர‌ஷ்யாதான், ஆக அதிக அளவில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. 35 விழுக்காட்டு கச்சா எண்ணெய் ர‌ஷ்யாவிடமிருந்து வருகிறது. எனினும், அந்த விகிதம் ஒவ்வொரு மாதமும் மாறுபடும்,” என்றார் திரு புரி.

எரிசக்தி தொடர்பிலான பங்காளித்துவங்களில் இந்தியாவின் போக்கு தொடர்ந்து மாறி வருவதையும் திரு புரி சுட்டினார். அந்த வகையில் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈராக், அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தித் துறையில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் குறித்தும் திரு புரி பேசினார். எடுத்துக்காட்டாக, மூவாண்டு காலத்தில் எரிசக்தி விலை குறைந்துள்ளது என்று அவர் கூறினார். உலகில் இந்தியா மட்டும்தான் அதைச் சாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்