விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம்: இந்தியர்களுக்கு மார்ச் முதல் சலுகை

2 mins read
13725d8a-e7dd-4d8a-b5b8-108ad6420c51
நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 28,500 இந்தியப் பயணிகள் ரஷ்யாவுக்குச் சென்றனர். - கோப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: ரஷ்யாவுக்கு இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்வதற்கான வசதி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசா இன்றி ரஷ்யாவுக்குள் நுழைய சீனா மற்றும் ஈரான் நாட்டுக் குடிமக்களுக்கு 2023 ஆகஸ்ட் 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வரிசையில் இந்தியக் குடிமக்களுக்கும் அச்சலுகையை வழங்க ரஷ்யா ஏற்பாடு செய்து வருகிறது.

அது குறித்த அறிவிப்பு ஒன்றை மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாகக் குழுத் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் வெளியிட்டுள்ளார்.

“இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது.

“2025 மார்ச் மாதம் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

“இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்ட கால நல்லுறவு காரணமாக, இந்தியாவை மிக முக்கிய சுற்றுலாச் சந்தையாக ரஷ்யா கருதுகிறது.

“விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

“கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா வருகின்றனர். 

“நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 28,500 இந்தியப் பயணிகள் மாஸ்கோவிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 1.5 மடங்கு அதிகம். 2023ஆம் ஆண்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். அது 2022ஆம் ஆண்டைவிட 26 விழுக்காடு அதிகம்.

“2023 முதல் இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த நான்கு நாள்களில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு 9,500 இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரியில் 1,700 இந்தியருக்கு இ-விசா வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

விசா கட்டுப்பாடுகளை எளிமையாக்குவதன் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் இந்திய, ரஷ்ய அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். அப்போது விசா இல்லாமல் இந்தியர்கள் மாஸ்கோ செல்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயப்பட்டது.

குறிப்புச் சொற்கள்