இந்தியாவிற்குத் தேவையான எண்ணெய் வழங்க தயார்: ரஷ்யத் தூதர்

இந்தியாவிற்குத் தேவையான எண்ணெய் வழங்க தயார்: ரஷ்யத் தூதர்

2 mins read
அமெரிக்கா ‘நெருக்கடி உத்தி’யைக் கையாள்வதாகச் சாடல்
939a338c-69ba-451b-af34-2ba752be709d
இந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ். - படம்: ரஷ்ய மன்றம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவுசெய்ய எவ்வளவு எண்ணெய் தேவைப்பட்டாலும் அதனை வழங்க ரஷ்யா தயாராக இருக்கிறது என்று இந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ரஷ்யாவின் எண்ணெய் விற்பனைமீது பொருளியல் தடைகளைக் கடுமையாக்கத் திட்டமிடுவதை அவர் ‘நெருக்கடி உத்தி’ எனக் கண்டித்தார்.

மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் தடைகள் மசோதா ஒன்றை வகுத்தார். அதன்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் அதிகம் வாங்கும் முதல் ஐந்து நாடுகளுக்கும், எரிசக்தித் தடைகளை மீற ரஷ்யாவிற்கு உதவும் முதல் ஐந்து நாடுகளுக்கும் 100 விழுக்காட்டுத் தீர்வை விதிக்க அமெரிக்க அதிபர் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு அதிகாரம் வழங்கப்படும்.

சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருள்களை அதிகம் வாங்குகின்றன.

இந்நிலையில், “இந்தியாவுக்குத் தேவையான அளவு எண்ணெய்யை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தடைகளையும் தீர்வைகளையும் விதிப்பவர்கள் நேர்மையான ஒத்துழைப்பிற்குப் பதிலாக நெருக்கடி உத்தியைக் கையாள்கின்றனர்,” என்று ‘ஏஎன்ஐ’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது திரு அலிப்போவ் அமெரிக்காவை மறைமுகமாகச் சாடினார்.

அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவிற்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நவம்பர் மாதம் நடைபெறும் இடைத்தேர்தல் வரையேனும் அது முடங்க வாய்ப்புள்ளது.

உக்ரேன் - ரஷ்யா சண்டை நீடித்துவரும் நிலையில், ரஷ்யாவின் போர்ச் செலவுகளுக்கு உதவும் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதே இத்தடைகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

“ரஷ்யா போன்ற பாரம்பரிய நட்பு நாடுகளுடனான தொடர்புகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது,” என்று திரு அலிப்போவ் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் இல்லை எனில், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகவும் ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்களாலும் சந்தையில் பெரும்பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

“ரஷ்ய எண்ணெய்யைத் தவிர்த்தால் உலகத்தால் எரிபொருள் தேவைகளைச் சமாளிக்க முடியாது; எரிசக்திச் சந்தைகளால் அதனைத் தாங்க முடியாது. இந்தியாவிற்கு எண்ணெய் வழங்க ஆர்வமாக உள்ளோம். அதுபோல் இந்தியாவும் எங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறது,” என்று திரு அலிப்போவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாரஷ்யாஎண்ணெய்எரிபொருள்அமெரிக்கா