புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய்க் கப்பலும் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய எரிவாயுக் கப்பலும் ஒரே நாளில் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
ஈரானில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களும் ஈரானின் பதிலடித் தாக்குதல்களும் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
அதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுவிட்டது. அது உலக எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுடன் இந்தியா மேற்கொண்ட அரசதந்திர முயற்சிகள் காரணமாக இந்தியக் கொடி தாங்கிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல டெஹ்ரான் அனுமதித்தது.
அந்தச் சிறப்பு அனுமதியைத் தொடர்ந்து இந்தியக் கொடி தாங்கிய ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய இரண்டு பெரிய பெட்ரோலிய எரிவாயுக் கப்பல்கள் கடந்த வாரம் இந்தியா வந்தன.
அந்த இரண்டு கப்பல்கள் மூலம் 92,700 மெட்ரிக் டன் பெட்ரோலிய எரிவாயு இந்தியாவுக்குக் கிடைத்தது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இருந்த அழுத்தம் சற்று குறைந்தபோதிலும் அது இந்தியாவின் தேவையில் மிகவும் சொற்பமான அளவுதான்.
இந்நிலையில், ‘அக்வா டைட்டன்’ என்னும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்று சனிக்கிழமை (மார்ச் 21) இந்தியாவின் மங்களூரை வந்தடைந்தது. இந்தக் கப்பல் முதலில் சீனாவின் ரிஷாவ் துறைமுகம் நோக்கி ஜனவரி மாத இறுதியில் பயணத்தைத் தொடங்கியது.
மார்ச் மாத நடுப்பகுதியில் அக்வா டைட்டன் கப்பல் தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்தபோது அது தனது திசையை மாற்றி இந்தியா நோக்கிப் பயணமானது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கப்பல் விரைவில் இந்தியா வந்து சேரும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்கா ஏற்கெனவே கூறியிருந்தார்.
அதன்படி, அந்தக் கப்பல் ‘நியூ மங்களூர்’ துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தியா தற்காலிகமாக ரஷ்ய எண்ணெய்யைக் கொள்முதல் செய்துகொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியதன் காரணமாக அந்த எண்ணெய்க் கப்பல் திசை திருப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதே நியூ மங்களூர் துறைமுகத்திற்கு அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ‘பைசிக்ஸ் பயனீர்’ எனப்படும் கப்பல் பெட்ரோலிய எரிவாயுவுடன் (எல்பிஜி) சனிக்கிழமை வந்து சேர்ந்தது.
பெட்ரோலிய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்களுக்கு மார்ச் 31 வரை சரக்குக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க, ரஷ்யக் கப்பல்கள் வந்துள்ளன.
கச்சா எண்ணெய்யும் சமையல் எரிவாயுவும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளதால் அடுத்த சில நாள்களுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என்று கூறப்படுகிறது.

