புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
“அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், நிதி, மனிதநேய உதவி, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் அதிபரின் பயணத்தின்போது முன்னெடுக்கப்படும்,” என்றார் அவர்.
ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை இந்தியா பேணி வருகிறது. அமெரிக்க நடவடிக்கைகளால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பு பாதிக்கவில்லை என்பதை ரஷ்ய அமைச்சர் சுட்டினார்.
மேலும், “ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியை ரஷ்யா ஆதரிக்கிறது. தற்போது மாறிவரும் உலகளாவிய நிலவரங்களுக்கு ஏற்ப மன்றம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு,” என்றார் திரு லாவ்ரோவ்.