தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகக் குகையிலிருந்து ரஷ்யப் பெண், குழந்தைகள் மீட்பு

2 mins read
473c8ba3-2cfa-453c-8309-c6c8b08d4875
அந்தப் பெண் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ‘பிசினஸ்’ விசா மூலம் இந்தியா சென்றதும் அந்த விசா 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியுடன் காலாவதியானதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. - படம்: இந்தியாடுடே.இன்

பெங்களூரு: கர்நாடக மாநில மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றில் தனியே காணப்பட்ட ரஷ்யப் பெண்ணையும் அவரது மகள்கள் இருவரையும் மாநிலக் காவல்துறை மீட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜூலை 9), ராமதீர்த்த மலைப்பகுதியில் சுற்றுப்பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு மேற்கொள்ளும் வழக்கமான சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த கோகர்னா காவல்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்தனர்.

நினா குடினா எனும் அந்த 40 வயதுப் பெண், தனது மகள்கள் பிரேமா, 6, அமா, 4, இருவருடனும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக்கூடிய வட்டாரத்திலுள்ள குகையில் தனியே வசித்ததாகக் காவல்துறை கூறியது.

இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு கோவா வந்ததாகவும் பின்னர் அங்கிருந்து, குகைப் பகுதிக்குத் தனிமையில் தியானம் செய்யச் சென்றதாகவும் நினா கூறினார்.

அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அதிகாரிகள் அந்தப் பகுதியைக் கண்காணித்துவந்தனர். குகைக்கு அருகே ஆடைகள் காயவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மேலும் விசாரித்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நினாவும் அவரது மகள்களும் அங்கு வசித்ததாகவும் அதிர்ஷ்டவசமாக வனவிலங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை என்றும் காவல்துறை கூறியது.

தனது கடப்பிதழும் விசாவும் தொலைந்துவிட்டதாகக் கூறினார் நினா. அதிகாரிகள் அந்தக் காட்டுப் பகுதியில் தேடி அவற்றைக் கண்டுபிடித்தனர்.

நினா, 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ‘பிசினஸ்’ விசா மூலம் இந்தியா சென்றதும் அந்த விசா 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியுடன் காலாவதியானதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அதன் பிறகு நேப்பாளம் சென்ற அவர், மீண்டும் 2018ஆம் தேதி செப்டம்பர் 8ஆம் தேதி இந்தியா சென்று சட்டவிரோதமாகத் தங்கியதாகத் தெரிகிறது.

நினாவும் பிள்ளைகளும் அரசாங்க மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூவரையும் ரஷ்யாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் அதிகாரிகள் ரஷ்யத் தூதரகத்தைத் தொடர்புகொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்