புதுடெல்லி: வளரும் நாடுகள் பொருளியல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
வளரும் நாடுகள் ஒற்றைச் சந்தை அல்லது ஏற்றுமதியாளரைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஐநா பொதுப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், ஒருமித்த கருத்துடைய வளரும் நாடுகளின் தலைவர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், உலகம் தற்போது மிகவும் அசாதாரண சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“உலகளாவிய தெற்கு (குளோபல் சௌத்) எனப்படும் வளரும் நாடுகளாகிய நாம், கொரோனா தொற்றுநோய், உக்ரேன், காஸா போர்கள், பருவநிலை சீற்றங்கள் எனப் பல சவால்களை எதிர்கொள்கிறோம்.
“நிலையற்ற வர்த்தகம், நிச்சயமில்லாத முதலீடு, வட்டி விகித உயர்வுகள் ஆகியவை பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்றார் திரு ஜெய்சங்கர்.
பல்வேறு அனைத்துலக அமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிதி பற்றாக்குறையால் அவை செயலிழந்து போவதாகச் சுட்டிக்காட்டினார்.
சீர்திருத்தங்களை தாமதப்படுத்தியதற்கான விலை என்னவென்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது என்றும் வளரும் நாடுகள் ஒன்றிணைந்து, உலக அளவில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பொருளியல் பாதுகாப்பிற்கான சுருக்கமான, நம்பகமான வினியோகச் சங்கிலிகள் அவசியம். ஒரே சந்தை அல்லது ஒரே ஏற்றுமதியாளரை சார்ந்து இருக்கக் கூடாது. உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும் போர்களுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்,” என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் வலியுறுத்தினார்.