திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன நேரத்தை கோவில் தேவசம் வாரியம் நீட்டித்துள்ளது.
நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில் தந்திரிகளுடன் காவல்துறையும் தேவசம் வாரிய அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோவில் சன்னிதானம் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். தற்போது 1.30 மணிக்கும், இரவு 11.15 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெருவழியில் வருவோர் எரிமேலி - பம்பை, சாலக்கயம் - பம்பை, புல்மேடு - சன்னிதானம் ஆகிய மூன்று வழிகளை பயன்படுத்துவர். புல்மேடு - சன்னிதானம் பாதை மற்ற இருவழிகள்போல் செங்குத்தான ஏற்றம் கொண்ட பாதையாக அல்லாமல், செங்குத்தான இறக்கம் கொண்டதாக இருப்பதால் அதிகளவிலான பக்தர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
அந்த வழித்தடத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும், இந்த வழியைப் பயன்படுத்துவோர் உரக்குழி அருவி பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

