சபரிமலையில் நெய் ஊழல்: 33 பேர்மீது வழக்குப்பதிவு

1 mins read
ரூ. 36 லட்சம் இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிப்பு
43cc3e1e-a744-4e90-a255-eff5029c146f
சபரிமலை ஐயப்பன் கோவிலில் விற்கப்படும் நெய்ப் பொட்டலம். - படம்: மனோரமா நியூஸ்

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கள்ளத்தனமாக நெய் விற்று ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அக்கோவிலின் 33 பேர்மீது திருவாங்கூர் தேவசம் போர்டு வழக்கு பதிந்துள்ளது.

அவர்களுள் தேவசத்தின் துணை ஆணையரும் விற்பனை முகப்பு ஊழியர்களும் அடங்குவர்.

அக்கோவிலில் வழங்கப்படும் ‘அதிய சிஷ்டம்’ எனப்படும் 13,765 நெய்ப் பொட்டலங்களைக் கள்ளத்தனமாக விற்றதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், சேமிப்பில் இருந்த 22,565 நெய்ப் பொட்டலங்களும் மாயமானதாகக் கூறப்படுகிறது.

அவற்றின்மூலம் கிட்டத்தட்ட ரூ.36.23 லட்சம் (S$51,324) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை மண்டலப் பூசைக் காலகட்டத்தின்போது, 89,300 நெய்ப் பொட்டலங்கள் விற்பனை முகப்புகளுக்கு விநியோகிக்கப்பட்டன. அவற்றுள் 143 பொட்டலங்கள் சேதமடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய 89,157 பொட்டலங்களை விற்றதன்மூலம் ரூ.89.12 லட்சம் திரட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின்போது, 75,450 நெய்ப் பொட்டலங்களை விற்றதற்கான ரூ.75.45 லட்சம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுபோல, 13,679 பொட்டலங்களுக்கான ரூ.13.67 லட்சத்தைப் பலரும் பங்குபோட்டுக்கொண்டதும் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தேவசம் நிர்வகிக்கும் பல்வேறு கோவில்களில் பூசாரிகளாகப் பணிபுரிபவர்கள் எனக் கூறப்பட்டது.

மண்டலப் பூசை முடிந்த பிறகு டிசம்பர் 27ஆம் தேதி கோவில் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 28,550 நெய்ப் பொட்டலங்கள் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்ட சரிபார்ப்புச் சோதனையின்போது 5,985 பொட்டலங்களே அங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேவசத்தின் சிறப்பு அதிகாரிகள் மூவர் உள்ளிட்டோர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்