திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கக்கவசம் தொடர்பான விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா 1998ஆம் ஆண்டு அக்கோவிலுக்கு வழங்கிய 30 கிலோவிற்கும் அதிகமான தங்கம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகிவிட்டன. அவற்றைக் கண்டறிய புலனாய்வாளர்கள் படாதபாடு படுகின்றனர்.
சபரிமலை நிர்வாக அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகிவிட்டதாக தேவசம் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தங்கத்தைச் செம்பாக மாற்றிக் காட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது திட்டமிட்ட திருட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மல்லையாவின் நன்கொடை தொடர்பில் எந்தச் சர்ச்சையும் இல்லை என்று புலனாய்வுக் குழு கூறியுள்ளது. ஆயினும், அவர் எவ்வளவு தங்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்பது குறித்த பதிவேடுகளையும் துணை ஆவணங்களையும் காணவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு அதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை நிர்வாக அலுவலர் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆவணங்கள் இன்றி, சன்னிதானத்தில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதையோ, எவ்வளவு தங்கத்தைக் காணவில்லை என்பதையோ அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியாது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கோப்புகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் வலுவாகியுள்ளதாகக் கேரள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமாக, சபரிமலை போன்ற புகழ்பெற்ற கோவில்களில், அனைத்து நகைகள் குறித்த எண்ணிக்கை, அளவு போன்ற விவரங்கள் அடங்கிய விரிவான பதிவேடுகள் இருக்கும்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டுவரை சபரிமலையில் அத்தகைய விரிவான கணக்குகளை வைத்திருக்கவில்லை என்றும் எத்தனைப் பொட்டலங்கள் உள்ளன என்பது மட்டுமே பதிவுசெய்யப்பட்டு வந்தது என்றும் முன்னாள் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அமைப்பு சார்ந்த இத்தகைய குறைபாடுகளே திருட்டுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.