திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல்போன வழக்கு தொடர்பாகத் திருவிதாங்கூர் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை (ஜூலை 23) கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் சபரிமலைக் கோயில் கருவறைக் கதவு நிலைகள் மற்றும் துவார பாலகர் சிலைகளுக்கு மின்முலாம் பூசுவதற்காகத் தங்கத்தைக் கொண்டுசென்றபோது தங்கம் திருடப்பட்டதாகக் கூறி சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது.
2025ஆம் ஆண்டில் ஆலய வாரியத் தலைவராகப் பிரசாந்த் பதவி வகித்தார். அப்போது, 2019ஆம் ஆண்டில் நடந்த தங்கத் திருட்டை மறைப்பதற்காகப் பழுது இல்லாத துவார பாலகர் சிலைகளில் பழுது இருப்பதாகக் கூறி மீண்டும் அவர் அனுப்பி வைத்ததாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் அறிக்கைமூலம், இந்த வழக்கில் குற்றவாளிகள் தங்கம் திருடிய முறை மற்றும் சதித்திட்டம் குறித்த தெளிவான தடயங்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை (ஜூலை 23) திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்துப் பிரசாந்தைச் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. இதே வழக்கு தொடர்பாக ஆலய வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் அஜி குமார் மற்றும் திருவாபரண ஆணையர் ஆர். ரெஜிலால் ஆகியோரிடமும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்படுவதற்குமுன் முகநூலில் பதிவிட்ட பிரசாந்த், தன் மீதான நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் 2019ஆம் ஆண்டில் நடந்த தங்கத் திருட்டை வெளிக்கொண்டு வந்ததே தங்கள் நிர்வாகம்தான் என்றும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

