சபரிமலை தங்க மோசடி வழக்கு: அதிரடி திருப்பமாக தலைமைத் தந்திரி கைது

2 mins read
de195807-3ae3-4441-86c3-1c0794f12785
தங்கம் திருட்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலின் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு.  - படம்: இந்து தமிழ் திசை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் நிகழ்ந்த தங்கத் திருட்டு மோசடி தொடர்பிலான வழக்கில் புதிய திருப்பமாக கோவிலின் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு நேற்று சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

கோவில் நிர்வாகத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் உள்ள ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி ஆவணம் மூலம் மோசடி

திருப்பதிக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலை ஐயப்பன் கோவிலில், சந்நிதான முகப்பில் உள்ள துவார பாலகர் சிலைக் கவசத்திலும் கதவு நிலைகளிலும் 4.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டிருந்தது.

இதிலிருந்த தங்கத் தகடுகளைத் திருடியபின் அவை ‘செம்புத் தகடுகள்’ எனப் போலி ஆவணங்களைத் தயாரித்து, சென்னைக்குக் கடத்தி விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்திரியின் பின்னணித் தொடர்பு

கைதான திருவிதாங்கூர் இந்து சமய அறநிலைய வாரியத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான பத்மகுமார், முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போற்றி ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், இந்த முறைகேடுகளுக்குத் தந்திரி கண்டரரு ராஜீவரு முக்கியத் தூணாக இருந்து உதவியதாகத் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் ஆதாரங்களைச் சேகரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அதிரடியாகத் தந்திரியைக் கைது செய்தனர்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியை, தேவசம் வாரியத்திடம் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அறிவுரைப்படியே துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

“தங்க மோசடி வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரைக் கைது செய்துள்ளோம்,’’ என்று தெரிவித்தனர்.

சபரிமலை திருத்தலத்தில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கைகளும் தங்க அபகரிப்பும் கோயில் உயர்மட்ட அதிகாரிகளாலேயே நடத்தப்பட்டிருப்பது ஐயப்ப பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கைதான தந்திரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்