சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

1 mins read
9806f786-ea7e-4066-b8fb-d912d288568f
நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - படம்: நக்கீரன்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

சபரிமலையில் சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோவில் கருவறை முன்பு இருந்த துவார பாலகர்கள் சிலைகள், கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்காக கோவில் நிர்வாகத்தினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது.

தங்கம் திருடப்பட்டது தொடர்பாக 11 பேர் அடுத்தடுத்து கைதாகினர்‌‌. புனரமைப்புப் பணிக்குத் தலைமை தாங்கிய உன்னி கிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் எனப் பலர் கைதான நிலையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) கேரளா, கர்நாடகா, தமிழகம் என மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேரளாவில் உள்ள உன்னி கிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் முன்னாள் வாரியத் தலைவர் பத்ம குமார் ஆகிய இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் மொத்தம் 21 இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை பல மணிநேரம் நீடித்ததாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்