திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலகக்கோரி பாஜக இளையரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) திருவனந்தபுரத்தில் உள்ள அம்மாநிலத் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். மேலும் கூட்டத்தைக் கலைக்கத் தடியடியும் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அப்போது போராட்டக்காரர்கள் முதல்வர் பினராயி விஜயனும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள காவல்துறை விரைவாக விசாரணை நடத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாஜக கூறியது. தடியடியில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் காயமடைந்தனர்.
விரைவில் விசாரணையை முடிக்காவிட்டால் அடுத்தகட்டப் போராட்டம் நடைபெறும் என பாஜக எச்சரித்துள்ளது.

