சபரிமலை யாத்ரிகர்கள் ஆற்றில் துணிகளைக் கொட்டினால் ரூ.5,000 அபராதம்

சபரிமலை யாத்ரிகர்கள் ஆற்றில் துணிகளைக் கொட்டினால் ரூ.5,000 அபராதம்

படம்: பிடிஐ

23 Nov 2026 - 3:56 pm

2 mins read

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பம்பை ஆற்றில் துணிகளையோ பிற கழிவுகளையோ கொட்டினால், அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மண்டல-மகரவிளக்கு யாத்திரைக் காலத்தின்போது ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்படி, பக்தர்கள் பயன்படுத்திய துணிகள், இதர ஜவுளிப் பொருள்கள், நெகிழி, பிற கழிவுகளை பம்பை ஆற்றிலோ, அதன் கிளை ஆறுகளிலோ குளிக்கும் இடங்களிலோ கொட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கூடுதல் மாவட்ட நீதிபதி திலீப் கே. கைனிக்காரா பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

15 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவர்கள்மீது வழக்கு தொடரப்படும். கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் தொடர்புடைய விதிகளுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023ன் பிரிவு 163ன்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றிலும் அதன் கரையோரங்களிலும் பெருமளவிலான பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் குவிந்திருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்ரிகர்களால் புனிதமானதாகக் கருதப்படும் இந்த ஆறு, பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், ஆற்றின் கீழ்ப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.

ஆற்றில் ஆடைகளையும் கழிவுகளையும் கொட்டுவது நீரின் இயல்பான ஓட்டத்தைத் தடுப்பதுடன், குடிநீரை மாசுபடுத்தி, நீரினால் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தத் தடையைச் செயல்படுத்துதல், அவ்வப்போது ஆய்வு செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பொறுப்புகள் பம்பை நீதிபதி, காவல்துறை சிறப்பு அதிகாரி, ரான்னி-பெருநாடு கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது பஞ்சாயத்து நிதியில் சேர்க்கப்பட்டு, சபரிமலை-பம்பைப் பகுதியில் தூய்மைப் பணிகள், கழிவு மேலாண்மை, நதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

சுமார் இருபது ஆண்டுகளாக, புனித நீராடிய பிறகு பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை விட்டுச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்