திருவனந்தபுரம்: பருவப் பெண்களைச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் வாரிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் நீண்ட நெடுங்காலமாக சிறுமிகளும் மூதாட்டிகளும் மட்டுமே ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
எனினும், கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான ஆன்மிக அன்பர்கள், அமைப்புகள் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களைப் பரிசீலித்து வரும் உச்ச நீதிமன்றம், மார்ச் 11ஆம் தேதிக்குள் தங்கள் நிலைப்பாடு குறித்து கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சபரிமலைக் கோவிலை நிர்வகித்து வரும் கேரள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாரியத்தின் தலைவர் ஜெயகுமார், பருவப் பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற நிலைப்பாட்டையே தொடர்வது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதில், வாரிய உறுப்பினர்களிடம் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை வாரியம் எப்போதும் ஆதரிக்காது என்றும் சபரிமலைக் கோவிலின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திரு ஜெயகுமார் வலியுறுத்தினார்.
“சபரிமலைக் கோவில், அதன் பாரம்பரியங்களைக் காக்கவே திருவிதாங்கூர் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்,” என்றார் அவர்.
சபரிமலை தொடர்பாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் மொழிகளில் 24 பக்க மாதாந்திரப் பத்திரிகை வெளியிடுவது குறித்து வாரியம் ஆலோசித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

