திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கக் கவசத்தை தங்கள் வீட்டில் வைத்து சிறப்புப் பூசை செய்ததாக பிரபல நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
தங்கக் கவசத்துடன் வீட்டில் உள்ள நகைகளையும் வைத்துப் பூசை செய்தால் செல்வம் பெருகும் என்று சிலர் கூறியதால் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
சபரிமலைக் கோவிலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நான்கு கிலோ எடையுள்ள தங்கம் மாயமானது. செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்ட ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகள், அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக்கவசத்தின் எடை குறைந்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக 11 பேரை கேரள சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதால் மத்திய அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின்போது சபரிமலை தங்கக்கவசம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அங்குள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூசை செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து காவல்துறையினர் அவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருவதாகவும் இதன்மூலம் அக்கோவிலின் முக்கியப் பிரமுகராகக் கருதப்பட்ட உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் தமக்கு தொடர்பு ஏற்பட்டது என்றும் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
உன்னி கிருஷ்ணன் மூலம் சபரிமலை தங்கக்கவசம் சென்னைக்குக் கொண்டு வரப்படும் தகவல் கிடைத்தது என்று தெரிவித்துள்ள ஜெயராம், அதை வீட்டில் வைத்துப் பூசை செய்தால் செல்வம் பெருகும் என்று உன்னி கிருஷ்ணன்தான் தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கோவிலுக்குச் சென்று வந்த பழக்கத்தால் உன்னி கிருஷ்ணனை தாம் நம்பிவிட்டதாகவும் சிறப்புப் பூசைக்காக அவருக்குப் பணம் ஏதும் தரவில்லை என்றும் ஜெயராம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நகை கடத்தப்பட்டதற்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

