கொச்சி: சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளைப் புதுப்பிக்கச் சென்னைக்கு அனுப்பியபோது 4,600 கிலோ தங்கம் மாயமானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தங்கம் மாயமானதாகப் புகார் எழுந்த நிலையில், கோவில் நிர்வாக அதிகாரிகள் ஒன்பது பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்தது.
அதேநேரம் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் ஒன்பது கோவில் நிர்வாக அதிகாரிகள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்குகளில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த 17ஆம் தேதி கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தங்கத் தகடு திருட்டு வழக்கில் கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

