புதுடெல்லி: பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்தவர் அது பற்றி முன்பே தெரிவிக்காததால் மத்திய ரிசர்வ் காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் காவல் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்தும்போது சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி பாகிஸ்தானைச் சோ்ந்த மேனல் கான் என்பவரை சிஆர்பிஎஃப் வீரரான முனீா் அகமது காணொளி அழைப்பு மூலம் திருமணம் செய்துள்ளாா்.
பின்னா் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசா காலம் முடிவடைந்த பிறகும் திருப்பி அனுப்பாமல் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, சிஆா்பிஎஃப் 41வது படைப்பிரிவில் பணியாற்றி வந்த முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அப்படையின் செய்தித் தொடா்பாளரும் டிஐஜியுமான எம் தினகரன் தெரிவித்தாா்.
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து, அவரை விசா முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்க வைத்து படைப்பிரிவின் விதிகளை முனீா் அகமது மீறியது மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்புக்கும் தீங்கு விளைவித்துள்ளாா். ஆகையால், படைப்பிரிவின் விதிமுறைகளின்படி விசாரணையின்றி முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா் என்று அவர் மேலும் தெரிவித்தார்.