சென்னை: வேலைசெய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களில் சென்னைக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.
அவதார் குழுமம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது.
‘பெண்களுக்கான முதன்மையான இந்திய நகரங்கள் 2024’ என்ற அந்த ஆய்வறிக்கை மொத்தம் 25 நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் 16 நகரங்கள் தென்மாநிலங்களைச் சேர்ந்தவை.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நகரங்கள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகியவையே அந்த எட்டு நகரங்கள்.
சமூகத்திலும் தொழில்துறையிலும் பெண்களை உள்ளடக்கி, வேலைசெய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பான, மீள்திறன்மிக்க, நீடித்த நிலைக்கத்தக்கதாக விளங்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
“நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக விளங்குகின்றன. பெண்கள் எப்படி வாழ்கின்றனர், வேலைசெய்கின்றனர், செழிப்புறுகின்றனர் என்பதை நகரங்களே வடிவமைக்கின்றன,” என்றார் அவதார் குழும நிறுவனத்தின் தலைவருமான சௌந்தர்யா ராஜேஷ்.
வரும் 2047ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ந்த நாடு’ எனும் நிலையை எட்ட இந்தியா இலக்கு கொண்டுள்ளது.
“அதற்கு, பெண்களும் தொழில்துறையில் ஆண்களுக்கு நிகரான நிலையில் இருக்க வேண்டும். நகரங்களில் ஆண்-பெண் பாகுபாடற்ற, பெண்களின் ஆற்றலையும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவான சூழல் நிலவினால் மட்டுமே அது சாத்தியம்,” என்றார் திருவாட்டி சௌந்தர்யா.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா முழுவதுமிருந்தும் 60 நகரங்களைச் சேர்ந்த 1,672 பெண்கள் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.
அதில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, கோவை உள்ளிட்ட நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்தன. ஒவ்வொரு நகரத்திற்கும் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த புள்ளிகள், அவதார் நிறுவனத்தின் ஆய்வு, அரசாங்கத் தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டியலில் நகரங்களின் நிலைகள் தீர்மானிக்கப்பட்டன.
மாநிலங்களைப் பொறுத்தமட்டில், பெண்கள் வேலைசெய்வதற்கு உகந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது. தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை பட்டியலின் அடுத்தடுத்த நிலைகளைப் பிடித்துள்ளன.