கடலோடி கொல்லப்பட்ட விவகாரம்: ஈரான் தூதரிடம் கண்டனம் தெரிவித்த இந்தியா

கடலோடி கொல்லப்பட்ட விவகாரம்: ஈரான் தூதரிடம் கண்டனம் தெரிவித்த இந்தியா

1 mins read
021d89e0-1623-4515-a778-16ff161eafca
ஈரான் தாக்குதல் நடத்திய கப்பல்களில் 30 இந்தியர்கள் உட்பட மொத்தம் 46 கடலோடிகள் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கடலோடி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஈரானின் துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஓமன் கடல் எல்லைக்குள் உள்ள ஹோர்முஸ் நீரிணையின் வழித்தடத்தில் சென்ற ‘எம்டி அல் பாஹியா’, ‘எம்டி மொம்பாசா’ ஆகிய இரு சரக்குக் கப்பல்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

அவ்விரு கப்பல்களில் 30 இந்தியர்கள் உட்பட மொத்தம் 46 கடலோடிகள் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

ஈரானின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் எண்மர் காயமடைந்ததாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தோரில் அறுவர் இந்தியர்கள், இருவர் உக்ரேன் நாட்டவர்கள்.

அச்சம்பவத்திற்கு இந்தியா தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் சரக்குக் கப்பல்களையும் பொது உள்கட்டமைப்பு வசதிகளையும் இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்தியக் கடலோடி கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி, ஈரான் தூதரகத் துணை தூதர் முகமது ஜாவத் ஹோசைனி, பிற ஈரான் உயர் அதிகாரிகளுக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இந்திய வெளியுறவு அமைச்சு அழைப்பாணை அனுப்பியது.

புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில், அவர்கள் முன்னிலையாகி அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்