லிவர்பூல்: இப்பருவத்துடன் லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி பதவியிலிருந்து யர்கன் கிளோப் விலகியதால் அக்குழு ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வேளையில், அதன் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரரான முகம்மது சாலா, சவூதி அரேபிய லீக்கிற்கு இடமாறலாம் என்று வெளியான தகவலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அடுத்த பருவத்தில் தான் லிவர்பூல் குழுவில் இருப்பேன் என்று சாலா தெரிவித்திருப்பது, அக்குழு ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாக அமைந்தது.
எகிப்து நாட்டவரான 31 வயது சாலாவிற்கும் லிவர்பூலுக்குமான ஒப்பந்தம் 2025 ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு லிவர்பூலைவிட்டு வெளியேறிய கிளோப்பையும் சாலா வெகுவாகப் பாரட்டினார்.
“கிளோப் காலத்தில் வென்ற கிண்ணங்கள் லிவர்பூலுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை அறிவோம். அடுத்த பருவத்திலும் கிண்ணம் வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நெதர்லாந்தைச் சேர்ந்த ஆர்ன ஸ்லாட் அடுத்த பருவத்தில் லிவர்பூல் நிர்வாகியாகச் செயல்படவிருப்பதை உறுதிப்படுத்தினார்.