பெண் குழந்தை விற்பனை; தாய் உட்பட நால்வர் கைது

பெண் குழந்தை விற்பனை; தாய் உட்பட நால்வர் கைது

1 mins read
00dbcab9-ab50-4afa-92f4-11e5430fad89
கடந்த 18ஆம் தேதி குழந்தை பிறந்ததாகவும் குழந்தை அடுத்த நாள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையைத் தாயே ரூபாய் 4 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விற்றதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சமூகப் பணியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

அதில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண், தனக்கு இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் ஆந்திராவைச் சேர்ந்த கணேசமூர்த்தி - செல்வரசி தம்பதிக்கு ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

விரைவாகச் செயல்பட்ட அதிகாரிகள், ஆந்திராவிலிருந்து குழந்தையை மீட்டதுடன், அத்தம்பதியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த 18ஆம் தேதி குழந்தை பிறந்ததாகவும் குழந்தை அடுத்த நாள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

19 வயதான பவித்ராவின் கணவர் பெயர் கணேஷ் என்றும் அவர் குற்றச் செயலுக்காக எட்டு மாதங்களாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சட்டவிரோதக் குழந்தை விற்பனை விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் மருத்துவமனையின் உரிமையாளரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைகள்கைதுசென்னை