மதுரை: சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சேலத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவரின் உடல் உறுப்புகள், ஐந்து தீவிர நோயாளிகளுக்குத் தானம் செய்யப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மருத்துவர் ராகினி, 25. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16 அன்று, ராகினி எதிர்பாராமல் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அன்றிரவே மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர் ராகினி, செவ்வாய்க்கிழமையன்று, மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் குழுவால் உறுதி செய்யப்பட்டது.
தன் மகளை இழந்து தவித்த போதிலும், ராகினியின் குடும்பத்தினர் ஒரு உன்னத முடிவை எடுத்தனர். ராகினியின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதன் மூலம், பலரின் வாழ்வை மீட்கும் மிகப்பெரிய மருத்துவத் தானத்திற்கு அவர்கள் வழிவகுத்தனர்.
தானமாகப் பெறப்பட்ட மருத்துவர் ராகினியின் உடல் உறுப்புகள், உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு உடனடியாக ஐந்து வெவ்வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.
கல்லீரல், ஒரு சிறுநீரகம் மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நுரையீரல் சென்னை மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கண் பார்வையற்ற இருவருக்கு ஒளியை வழங்கின.
உடல் உறுப்பு தானம் குறித்த ஒப்புதல் பணிகள் முடிந்த பின், மருத்துவர் ராகினியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டும் விதமாக, மருத்துவத்துறை இணை இயக்குநர் செல்வராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ரா, மருத்துவமனை நிர்வாகத்தினர், சக மருத்துவ மாணவர்கள் அனைவரும் ராகினியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த இளம் மருத்துவர் ராகினியின் இறுதிச் சடங்கு, அரசு மரியாதையுடன் நடந்தது. அவர் உடலால் மறைந்தாலும், அவர் தானம் செய்த உறுப்புகளின் மூலம் ஐந்து பேரின் உடலில் வாழத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

