திரை நட்சத்திரங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சலீம்: மும்பை காவல்துறை அதிர்ச்சி

2 mins read
a2b3ff5a-6b31-4c88-9ebb-90e558fa4088
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முகம்மது சலீம். - படம்: ஊடகம்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது சலீம் என்பவர் இந்தியாவில் உள்ள பல திரை நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள்களை விநியோகம் செய்ததாக அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் விநியோகத்துக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததாக அவர் மும்பை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது ரூ.252 கோடி மதிப்புள்ள ‘மெபெட்ரோன்’ போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக முகம்மது சலீம் முகம்மது சுஹைல் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் துபாயில் விலையுயர்ந்த கார்கள், கைக்கடிகாரங்கள், பிரம்மாண்ட வீடுகள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், அனைத்துலக காவல் அமைப்பான இன்டர்போல் சலீமுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டு அவரைத் தீவிரமாகத் தேடிவந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டார் சலீம். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் திரையுலகத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.

“சலீம் விருந்து நிகழ்ச்சிகளில் லேசர் விளக்குகளை ஒளிரவிட்டு பிரபல பாடல்களுக்கு நடனமாட சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை கவர்ந்துள்ளார்.

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் இவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அந்த திரைப்பிரபலங்களுக்கு போதைப்பொருள்களை விநியோகம் செய்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்தது.

சலீம் ஏற்பாடு செய்த ஒரு விருந்தில், தாவூத் இப்ராஹிமின் மருமகன் அலிஷா பார்க்கர் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விருந்து நிகழ்வுகளில் பங்கேற்ற பிரபலங்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் மும்பை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்