லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அப்போது காங்கிரஸ் கட்சியும் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெற்றுவரும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோல்வி அடைவது உறுதி என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி நீடிக்கும் என்றும் காங்கிரசுடனான உறவு தொடரும் என்றும் திரு அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
இதனிடையே, லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை என்று விமர்சித்தார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றத் தவறிய பாஜகவுக்கு, மத்தியில் ஆட்சியில் நீடிக்க எந்தவித உரிமையும் இல்லை என்றும் திரு அகிலேஷ் தெரிவித்தார்.
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் எனக்கூறிய அவர், ‘சட்டமன்றத்தில் தோற்பவர்கள் வெளியிலும் தோற்பது இயல்புதான்’ என்பதற்கு அது உதாரணமாகப் போகிறது என்றார்.
எதிர்க்கட்சிகளைப் பெண்களின் எதிரிகள் என்று குறிப்பிடும் பாஜகதான், பெண்களின் உண்மையான விரோதி என்று அவர் குறிப்பிட்டார். இதுவரை ஒரு பெண்மணிகூட அக்கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், வாக்குகள் தேவைப்படும்போது மட்டும் பெண்களை உயர்த்திவைத்து முழக்கம் எழுப்பும் அக்கட்சியின் உண்மை நிலை இப்போது அம்பலமாகிவிட்டதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

